தென்காசியின்.நகர வரலாறு மற்றும் கதை - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Saturday, December 30, 2023

தென்காசியின்.நகர வரலாறு மற்றும் கதை

தென்காசியின் கதை

1984-89 தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்,
உயர்நீதிமன்ற வழக்கு உரைஞர் 
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா (73)
+91 70101 33663
உடன் அருணகிரி உரையாடல். 
23.12.2023

பகுதி 1 

அருணகிரி

ஐயா, 
சங்கரன்கோவில் நகர வரலாறு எழுதி, 
புத்தகமாக வெளியிட்டு இருக்கின்றேன். 
அதுபோல, தென்காசி பற்றிய ஒரு அறிமுகம் எழுத விழைகின்றேன். 
உங்கள் நினைவுகளில் இருந்து தொகுத்துச் சொல்லுங்கள். 

வேங்கடரமணா

13 ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர் 
மாலிக் கபூர், 
தெற்கு இந்தியாவில் பல்வேறு அரசுகளின் மீது தாக்குதல் தொடுத்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றார். 
தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கொள்ளை அடித்தார். அப்போது நிறையப் பேரைக் கொன்றார்

அதன்பிறகு, மதுரையை நோக்கி வந்தார். 
முந்தைய தாக்குதல்களில் அவர் விளைவித்த கொடுமைகளைக் கேட்டு அஞ்சிய பாண்டிய மன்னர்கள், 
மதுரையை விட்டுப் புலம்பெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்தனர். 
அவர்கள், தென்காசியைத் தலைநகர் ஆக்கிக் கொண்டனர். 
விந்தன் கோட்டை என்ற இடத்தில் அவர்கள் கோட்டை இருந்ததாக 
ஒரு செய்தி இருக்கின்றது.

தென்காசி கோவிலுக்கு நீங்கள் போனால், நுழைவாயிலில் யானைச் சிலை இருக்கின்றது. 
அதற்கு அருகில் ஒரு கல்வெட்டு இருக்கின்றது. 

அதில் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்றால், 
பாண்டிய மன்னர் குலசேகரனின் வழிவந்த பராக்கிரம பாண்டியனின் கனவில், ஒரு வயதான பிராமணர், அவருடைய மனைவி, அவனுடைய குண்டுப் பிள்ளை மற்றும் ஒரு ஒல்லிப் பிள்ளை ஆகிய 4 பேர் வந்தனர். 

‘நாங்கள் காசியில் இருந்த வீடு இடிந்து போய்விட்டது; 
இப்போது எங்களுக்கு வீடு இல்லை; எனவே, நீ ஒரு வீடு கட்டித் தா’ என்று அவர்கள் கேட்டனர். 

மன்னர் உறக்கம் கலைந்து எழுந்தார். 
தன் கனவில் வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். 
எனவே,சிவனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்துப் பணிகளைத் தொடங்கினார். 
அப்படி அவர் கட்டிய கோவில்தான் இந்தத் தென்காசி ஆலயம்.  

காசியில் இருப்பது போன்ற கோவிலைக் கட்டியாகி விட்டது. 
ஆனால், அங்கே ஓடுகின்ற கங்கை போல ஒரு ஆறு வேண்டுமே? 
அதற்கு என்ன செய்வது? 

அப்போது ஊருக்கு வடக்கே ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டு இருந்தது. 
அந்த ஆற்றின் கரையில், 
சிற்றாற்று வீரி அம்மன் கோவில் இருக்கின்றது. 
அந்த ஆறுதான் குற்றாலத்தில் அருவியாக விழுகின்றது. 
அதற்கு சித்திர கங்கை என மற்றொரு பெயரும் உண்டு. 

அந்த ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி, தென்காசிக்குத் தெற்கே ஆற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்தார். 

இந்த ஊருக்கு வடக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு தெற்கு நோக்கி வந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றது. 
அது, ப என்ற வடிவத்தில் இருக்கின்றது.

நான் காசிக்குப் போயிருந்தபொழுது, 
அந்த ஊரின் அமைப்பைக் கவனித்தேன். 
அதுவும், இந்தத் தென்காசி ஊரின் அமைப்பும் ஒன்றுபோலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது. 

காசிக்கு முன்பாக நின்று கொண்டு, 
ஒரு கண்ணாடியைப் பிடித்துப் பார்த்தால், 
அந்தக் கண்ணாடியில் தெரிகின்ற படத்தில் இடம் வலமாக மாறித் தெரியும் அல்லவா? அத்தகைய தோற்றத்தில் இந்தத் தென்காசி இருக்கின்றது. 
காசி போலவே இங்கும் படித்துறை உள்ளது. 

பொதுவாகத் தமிழ்நாட்டில் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், 
அந்த ஊரின் ஒன்றாம் எண் பட்டாதாரர் யார் என்றால், 
அது அந்த ஊர்க் கோவிலின் இறைவனாகத்தான் இருப்பார். 

அப்படி உங்கள் சங்கரன்கோவில் நகரின் முதல் பட்டாதாரர் சங்கரலிங்கப் பெருமான்தான். 
அடுத்து அந்த ஊரில் யாரிடம் கூடுதலாக நிலம் இருக்கின்றதோ, 
அவர் இரண்டாம் எண் பட்டாதாரர் ஆக இருப்பார். 
அவருக்கு அடுத்தவர் 3 ஆம் எண் பட்டாதாரர். இப்படித்தான் இருக்கும். 

அப்படி இந்த த் தென்காசியில் முதல் பட்டாதாரர்,  
இறைவன் காசி விஸ்வநாதர். 
அவருக்கு அடுத்த பட்டாதாரர், 
மாசி வீதியில் எங்கள் வீட்டுக்குக் கீழ் வீட்டுக்காரர். 
அவர் ஒரு தெலுங்கு பிராமணர். அவரது வழித்தோன்றல்கள், எல்லாச் சொத்துகளையும் விற்றுவிட்டுப் போய் விட்டார்கள். 

மூன்றாம் எண் பட்டாதாரர் நாங்கள்தான். 

என் கொள்ளுத் தாத்தா சுந்தரம் ஐயர் காலத்தில் அல்லது அவருக்கு முன்பு  இருந்தே, 
நாங்கள் மூன்றாம் எண் பட்டாதாரர்கள். 

நாங்கள் கௌண்டின்ய கோத்திரம். 
தென்காசி இறைவன் விஸ்வநாதரும் கௌண்டின்ய கோத்திரம்தான். 

இப்படி ஒவ்வொரு ஊர் சாமிக்கும் ஒரு கோத்திரம் உண்டு. 
எங்கள் குலதெய்வம், 
இந்த லோகநாயகிதான்.

ராஜா இந்தக் கோவிலைக் கட்டும்பொழுது அவருக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது. 

காசி கோவிலே இடிந்து விட்டதே? 
அப்படி இந்தக் கோவிலும் இடிந்து விடுமா? அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்படுமா? என்ற ஐயம் ஏற்பட்டது. 

எனவே, ‘’அப்படி இந்தக் கோவில் ஏதேனும் ஒரு காரணத்தில் பழுதுபட்டால், 
அந்தப் பழுதை நீக்கி புதுப்பித்துக் கட்டுபவருக்கு நான் அடிமை’ என்று கூறி, அவரே ஆறு பாடல்களை இயற்றினார்.

தென்காசி மேவும் பொன் ஆலயத்துக்கு 
வாராது ஓர் குற்றம் வந்தால், 
அங்கு வந்து நேராகவே புரப்பார் தன்னை 
நீதியுடன் பாரார் அணியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே என்று தொடங்கி, 
ஆறு பாடல்கள் பாடி இருக்கின்றார். 

இந்தக் கோவிலைக் கட்டுகின்றவர் ஒரு அரசர். பின்னாளில் அதைப் பழுது பார்த்துப் புதுப்பிக்கின்றவரும் ஒரு அரசனாகத்தானே இருக்க முடியும்? அதற்கு ஒரு பாடல் பாடி இருக்கின்றார். 

இந்தக் கோவிலுக்கு இதுவரை நான்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. 
1948 ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அதை நடத்திய குழுவுக்கு என் தாத்தா சகஸ்ரநாம ஐயர் துணைத்தலைவராக இருந்தார். 
அதற்கு ஒரு கல்வெட்டு இருக்கின்றது.

1964 ஆம் ஆண்டு ஒரு குடமுழுக்கு நடைபெற்றது. 
அப்போது அவர்கள், ஒரு பெரிய கல்லைக் கோபுரத்தில் பொருத்தினார்கள். 
ஆனால் அது சரியாக நிற்காமல், கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. 
அப்போது கோபுரத்தின் வாயிலில் இருந்த யாளி சிலையின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது. 

அந்தச் செய்தி ஊர் முழுமையும் பரவியது. ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்த்தார்கள். சிறுவனாக இருந்த நானும் போய்த் தடவிப் பார்த்தேன். 

எனவே, பழைய கோபுரத்தை முழுமையாக இடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். 
இப்போது அமைச்சராக இருக்கின்ற பழனிவேல் தியாகராசன் அவர்களின் தாத்தா, சர் பி. தியாகராசன் அவர்கள் தலைமையில் இருந்த குழுதான், அந்தக் கோபுரத்தை இடித்து விட்டுப் புதிய கோபுரம் கட்டத் தீர்மானித்து, இடித்து விட்டனர்.  

அதன்பிறகு, இந்தத் தென்காசி பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. 
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 
1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டது. 
திமுக ஆட்சி ஏற்பட்டது. 

1977 ஆம் ஆண்டு, எம்ஜிஆர் தலைமையில் அண்ணா திமுக ஆட்சி அமைந்தது. 
அதுவரை, புதிய கோபுரம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. 
இடிந்த கோபுரமாகவே இருந்தது. 

அப்போது, பாண்டிய மன்னனின் நிறைவேறாத கனவு Unfulfilled dream of Pandya King என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். 
அது ஆங்கில இந்து ஏட்டில் வெளியாகி இருக்கின்றது.

அறநிலையத்துறை அமைச்சர் வீரப்பன் அவர்கள் காலத்தில், 
தென்காசி கோவில் கோபுரத்தைக் கட்ட வேண்டும் என முயற்சி எடுத்தார். 

தினத்தந்தி உரிமையாளர் பா. சிவந்தி ஆதித்தன் அவர்களை அழைத்து, 
இந்தக் கோபுரத்தை நீங்கள் கட்டுங்கள். அரசு சார்பில் நாங்கள் ஒரு தொகை தருகின்றோம். பல கோவில்களின் சார்பில் பணம் தர ஏற்பாடு செய்கிறோம்  என்று சொன்னார். 

அப்போது சிவந்தி ஆதித்தன், 

ஐயா, முதல் நிலையும், கடைசி நிலையும் என் சொந்தப் பணத்தில் கட்டுகிறேன். 
மற்ற நிலைகளுக்கு நீங்கள் பணம் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

முதல் நிலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 
1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. 
அந்த நாளில்தான், நான் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டி இடுவதற்கு, வேட்பாளர் விண்ணப்பம் தாக்கல் செய்தேன். 
எனவே அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. 

ஆனால் என் அப்பா கலந்துகொண்டார்.  

அந்தக் கோவிலில் சுவாமி சந்நிதிக்கும், 
அம்மன் சந்நிதிக்கும் நடுவில் ஒரு சந்நிதி இருந்தது. இப்போது அங்கே முருகப் பெருமான் இருக்கின்றார். ஆனால் உண்மையில் அங்கே பொருந்தி நின்ற பெருமாள்தான் இருந்தார். 

அருணகிரி

அப்படி ஒரு கோவில் ஆற்றங்கரையில் இருக்கின்றதே? இன்று  நான் பார்த்தேன். 
சொர்க்கவாசல் திறப்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். 

வேங்கடரமணா

ஆமாம். அந்தப் பெருமாள்தான், முதலில் கோவிலுக்கு உள்ளே இருந்தார். 

அவருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது? 

சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் பொருந்தி நிற்கின்றார். 
எனவே சீனிவாசப் பெருமாள் இங்கே பொருந்தி நின்ற பெருமாள் ஆனார். 

எல்லா இடங்களைப் போலவே, சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் சண்டைகள் இங்கேயும் நடந்தன. ஆதிக்கம் பெற்று இருந்த சைவர்கள், 
பொருந்தி நின்ற பெருமாள் சிலையை எடுத்து வந்து, சித்ரா நதிக்கரையில் கொண்டு போய் நிறுத்திவிட்டனர். 

ஆனால், அவருடன் இருந்த மகாலெட்சுமியை அங்கே கொண்டு போகவில்லை. அவரை, கோவிலுக்கு உள்ளேயே வைத்துக் கொண்டனர். 
காரணம், அவர் சிவபெருமானின் தங்கை அல்லவா? 

இந்த சைவர்கள் லட்சுமியை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், பெருமாளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
இப்படிப்பட்ட சண்டைகளைத்தான் ஆதி சங்கரர் மாற்றி அமைத்தார். 

இந்து மதம் என ஒன்று கிடையாது என இப்போது சொல்லுகின்றார்கள். ஆனால், அது அப்படி அல்ல. 
முதலில் திராவிடர் கழகம். அடுத்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என எத்தனையோ கட்சிகள் வந்தது போல, இந்து மதத்திலும் பல பிரிவுகள் உண்டு. 

1964 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்த காலத்தில், திருச்செந்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி போலவே ஒரு சிலையைச் செய்து, 
இந்தக் கோவிலில் நிறுவி விட்டனர். 

அதாவது மாமன் இருந்த இடத்தில் மருமகன் வந்து விட்டார். ஆனால், மாமி மகாலெட்சுமி பின்னாடி இருந்தார். 

அந்தக் காலகட்டத்தில் ஒரு பெரிய சாமியார் வந்தார். கோவிலைச் சுற்றிப் பார்த்தார். 
அப்போது அவருடன் நாங்களும் சேர்ந்து போனோம். 

உங்கள் ஊர் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், 
இந்த மகாலெட்சுமியின் பார்வை இந்த ஊர் மேல் படவில்லை. 
ஒரு தூண் மறைத்துக்கொண்டு இருக்கின்றது. 
அந்தத் தூணை நீங்கள் நகர்த்த முடியாது. 
அதற்கு மாறாக, மகாலெட்சுமியை சற்றே நகர்த்தி முன்னால் கொண்டு வர வேண்டும். 

இந்தக் கோபுரத்தை நீங்கள் மீண்டும் கட்டுவீர்கள். குடமுழுக்கு நடைபெறும். அப்போது மகாலெட்சுமியை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுவ வேண்டும் என்று சொன்னார். 

அதை நானும் கேட்டுக்கொண்டு இருந்தேன். 
அன்று அவர் சொன்னதுபோலவே, பின்னாளில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 

அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் என் அப்பா கலந்து கொண்டு பேசினார். 
அவருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் அறிவுக் கடல் என்று பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள். 

அவர் பேசும்போது சொன்னார்..

‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கோபுரத்தில் தீப்பிடித்து எரிந்து பாதியாக உடைந்து போயிற்று. அதன்பிறகு, 1948 ஆம் ஆண்டுதான், 
இந்தக் கோவிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது. 
1964 இல் உடைந்த கோபுரத்தை முழுமையாக இடிப்பது எனத் தீர்மானித்து இடித்து விட்டோம். 
புதிய கோபுரம் கட்ட முடியவில்லை. 
ஆனால், பாலசுப்பிரமணியரைக் கொண்டு வந்து நிறுத்தினோம். 

அவர், தன் பெயர் கொண்ட பாலசுப்பிரமணிய ஆதித்தன் மகன் சிவந்தி ஆதித்தனாரை அழைத்து வந்து, 
இந்தக் கோபுரத்தைக் கட்ட ஏற்பாடு செய்து இருக்கின்றார். எனவே, இந்தக் கோவில் கோபுரத்தைப் புதுப்பித்துக் கட்டுவது உறுதி’ என்று என் அப்பா பேசினார். 

அநதக் காலகட்டத்தில், 1984 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். 
அதனால், சிவந்தி ஆதித்தனாருடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டன. 
அவர் தன் சொந்தப் பணத்தில் 40 இலட்சம் ரூபாய் கொடுத்து கட்டுமானப் பணிகள் தொடங்கின. 
அரசு பணம் கொடுத்தது. ஏராளமான மக்கள் நன்கொடைகள் அளித்தனர். மளமளவென கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.  

முத்தையா ஸ்பதிதான் கட்டினார். 
ஒவ்வொரு நிலை கட்டத் தொடங்கும்பொழுதும் சிவந்தி ஆதித்தனார் அதற்கு விழா நடத்தினார். 
கடைசி நிலை கட்டத் தொடங்கும்பொழுது நடைபெற்ற விழாவில் நான் பேசினேன். 

‘இந்தக் கோபுரத்தை, சிவந்தி ஆதித்தனார் வந்துதான் கட்டுவார் என்பது பராக்கிரம பாண்டியனுக்கு முன்பே தெரியும். அவர் பாடிய பாடலில் அந்தக் குறிப்பு இருக்கின்றது என்று சொன்னேன். 

எல்லோரும் வியப்பு அடைந்தார்கள். 

அந்தப் பாடல் என்ன சொல்லுகின்றது?

நிருபர் தம் பெருமையைச் சொல்லவும் அரிதே என்பது அப்பாடலின் ஒரு வரி. 

அதை நான் படித்துப் பார்த்தேன். 
நிருபர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை, தமிழ்ச் சொல் அகராதியில் தேடிப் பார்த்தேன். 
நிருபர் என்றால் அரசன் என்று பொருள். 
அரசன் என்பதற்கு கோ என்ற சொல்லும் உண்டு. 
அந்தக் கோவின் பெருமையைச் சொல்லவும் அரிதே எனப் பாடி இருக்கின்றார். 

ஆனால், நிருபர் என்ற சொல்லை  ஏன் சொல்லி இருக்கின்றார்?

பிற்காலத்தில் ஊடகத் துறையில் நிருபராக, செய்தியாளராகப் பணியைத் தொடங்கிய சிவந்தி ஆதித்தன்தான் வந்து இந்தக் கோபுரத்தைக் கட்டுவார் என்று எங்கள் அரசர் அன்றே பாடி இருக்கின்றார்’ என்று சொன்னேன். 

அதைக் கேட்டு சிவந்தி ஆதித்தன் எழுந்து வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். 

அடுத்து பின்னர் ஒருநாள், சிவந்தி ஆதித்தன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். 

‘ரமணன், ராணி வார இதழ் சார்பில், தென்காசி கோபுரம் சிறப்பு மலர் ஒன்று வெளியிடுகின்றார்கள். ஆசிரியர் அ.மா. சாமி என்ற குரும்பூர் குப்புசாமிதான் எழுதுகின்றார். அந்தக் கட்டுரையில், நீங்கள் அன்று பேசியதையும் சேர்க்க வேண்டும் என்று அவர் சொல்லுகின்றார். சேர்த்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டார். 

இதை என்னிடம் நீங்கள் கேட்க வேண்டுமா? தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

கோபுரப் பணிகள் நடைபெற்ற பொழுது, மகாலெட்சுமியை சற்றே நகர்த்தி முன்னால் கொண்டு வர வேண்டும் என்று சிவந்தி ஆதித்தனாரிடம் சொன்னேன். அப்படியே கொண்டு வந்தார்கள். அதன்பிறகு, மகாலெட்சுமியின் பார்வை இந்த ஊர் மேல் பட்டது. 

இந்த கோபுரம் வளர வளர, இந்த ஊரும் வளர்ந்தது. இன்று ஒரு மாவட்டத்திற்குத்  தலைநகரும் ஆகிவிட்டது. இன்று சென்னையில் ஒரு இடம் வாங்கி விடலாம். ஆனால், எங்கள் தென்காசி கடைவீதியில் ஒரு இடம் வாங்க முடியாது. அவ்வளவு மதிப்பு ஏறி விட்டது. 

ஆர்.எம்.வீரப்பன், சிவந்தி ஆதித்தனாருக்கு, நானும் ஒரு அணில் போல உடன் இருந்து உதவிகள் செய்து இருக்கின்றேன். அதனால்தான், அடுத்து நான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காலத்திலும், கோவில் குடமுழுக்குக் குழுவில் என்னை ஒரு உறுப்பினராக ஆக்கினார். 

சிவந்தி ஆதித்தனார் நடத்திய அந்த இரண்டாவது குடமுழுக்கின்போது, 
அம்மன் சந்நிதிக்கு ஆன செலவுகள் முழுமைக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். 
அமெரிக்காவில் இருக்கின்ற என் தம்பி விஸ்வநாதன், கோவில் கிணறில் இருந்து மின்மோட்டார் பொருத்தி, அடிபம்பு அமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். 
இப்படி நிறையப் பேர், நிறைய உதவிகள் செய்தார்கள். 
இன்றைக்கு ஊர் வளர்ந்து விட்டது. 

நாலாப்புறங்களிலும் புதிய புதிய வீடுகள் கட்டிக்கொண்டே போகின்றார்கள். 

இந்த ஊரை ராஜா கட்டியபொழுது, 
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பகுதியை ஒதுக்கினார். 
ஆற்றங்கரையில்தான் பிராமணர்கள் குடியிருந்தனர். இப்போது அது தெற்கு மாசி வீதி. 

அடுத்தது மட்டப்பா தெரு. 
அதாவது அந்தத் தெருவில் பல வீடுகள் மட்டப்பா போட்டுக் கட்டிய வீடுகள்.  

அதில் ஒரு வேடிக்கை என்றால், இந்த ஊர் தென்காசி வட்டத்தில் இருக்கின்றது. 
ஆனால் அப்போது அந்த மட்டப்பா தெரு மட்டும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருந்தது.

அருணகிரி

ஏன் அப்படி? என்ன காரணம்?

வேங்கடரமணா.

அம்பாசமுத்திரத்துக்காரர்களுக்கு, 
இங்கே கொட்டாகுளத்தில் நிலங்கள் இருந்தன. அவர்கள்தான் அந்த மட்டப்பா தெருவில் இருந்தார்கள். எனவே, அது அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருந்தது. 

அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி பெரிய ஊர் அல்ல. 
அம்பாசமுத்திரம்தான் பெரிய ஊர். அங்கேதான் 
முதலில் முன்சீப் கோர்ட்டு வந்தது. 
1920 ஆம் ஆண்டில்தான், தென்காசியில் முன்சீப் கோர்ட்டு வந்தது. 
அதுவரையிலும் எங்கள் தாத்தா, அம்பாசமுத்திரம் முன்சீப் கோர்ட்டில்தான் வழக்கு உரைஞராக இருந்தார். 

அவருக்கு அடுத்து என் அப்பா, 
நான், என் மகள் என நான்கு தலைமுறைகளாக வழக்கு உரைஞர் தொழில் 
செய்து வருகின்றோம். .
மகள் இப்போது லண்டனில் இருக்கின்றார். 

அருணகிரி

என் ஒரே மகள், லண்டனில் மைக்ரோபயாலஜி சயின்டிஸ்டாக இருக்கின்றார். 

வேங்கடரமணா

அப்படியா? 
இந்தியாவில் அந்த மைக்ரோபயாலஜி துறையில் முதன்முதலாக ஆய்வுகள் மேற்கொண்டு நீலப்பச்சைப் பாசியைக் கண்டுபிடித்தவர் 
இந்தத் தென்காசியில் பிறந்த டாக்டர் கோபால்சமுத்திர சீதாராமன் வெங்கட்ராமன்தான். 

அவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து இருக்கின்றது. 
அவர் என் அத்தையின் மகன், 
என் உடன்பிறந்த அக்காவின் கணவர். தில்லியில் வசித்தார்கள்.  

அடுத்து இந்தத் தென்காசி மாவட்டம் அமைந்த பிறகு முதன்முதலாக, ஆய்குடி அமர் சேவா சங்கம் இராமகிருஷ்ணன், பத்ம ஸ்ரீ விருது பெற்று இருக்கின்றார். 

அடுத்து ஊர் அமைப்புக்கு வருவோம். 

இந்த ஊரின் அமைப்பு வியக்கத்தக்கது. 

இப்பொழுது இவ்வளவு பெரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதே, திருநெல்வேலி, தூத்துக்குடி எல்லாம் வெள்ளத்தில் மிதக்கின்றதே? 

அதேபோலத்தான்,  ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு 
மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுமையும் இடைவிடாமலை பொழிந்து மறுநாள் திங்கள் கிழமை காலை வரையிலும் பெய்ததே? 
ஆனால், தென்காசிக்கு ஒன்றும் ஆகவில்லையே? ஒரு சொட்டுத் தண்ணீர் தேங்கவில்லையே? 

காரணம், தென்காசி ஊருக்கு வடக்குப் பகுதி உயரமாகவும், தெற்குப் பகுதி தாழ்வாகவும் இருப்பதால், அந்தத் தண்ணீர் முழுமையும் அப்படியே ஆற்றில் போய்ச் சேர்ந்து விட்டது. 

அதற்கு மேலும் இரண்டு காரணங்கள் உள்ளன. 

தென்காசிக்கு நடுவே ஒரு தெப்பக்குளம் இருக்கின்றது. சன் தொலைக்காட்சி நண்பர் தேவராஜன்தான் எனக்கு இந்தத் தகவலைச் சொன்னார். 
நீங்கள் அவரையும் சந்திக்க வேண்டும். 
கேரள மன்னர்தான் சீவலப்பேரி குளத்தைத் தோண்டினார் என்று சொன்னார். 

அந்தக்  குளத்தில் இருந்து, தெப்பக்குளம் வரை, தரைக்கு உள்ளேயே ஒரு கால்வாய் இருக்கின்றது. சீவலப்பேரி தண்ணீர், முடுக்கு விநாயகர் கோவில் வழியாக, தெப்பக்குளத்திற்கு வந்து சேருகின்றது. வழியில் மூன்று நான்கு கிணறுகள் இருக்கின்றன. 

அந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால், அதைப் பழுதுபார்க்க கண்காணிப்பு அறை Inspection Chamber கட்டி இருக்கின்றார் மன்னர். அதற்கு மேல் கல் போட்டு மூடி இருக்கின்றார்கள். 

அடுத்தது, அந்த த் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிறைந்து விட்டால், 
ஊரில் உள்ள அத்தனைக் கிணறுகளிலும் தண்ணீர் பெருகும். 

இப்படி ஒரு அருமையான நீர் மேலாண்மைத் திட்டம், இந்தத் தென்காசியில் இருக்கின்றது. 
ஆவணி மூல நாளில், தெப்பத் திருவிழா நடைபெறும். 

இது அந்தக் காலத்து நகர அமைப்பு. 

தென்காசியில் மட்டப்பா தெருவுக்கு  அடுத்தது  அனுமந்தபுரம் தெரு. அடுத்து, புதுத் தெரு. ருக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம் என ஒரு வேதத்திற்கு இரண்டு தெருக்கள் இருந்தன.

அடுத்து ஒரு அதிசயம் இந்த ஊரில் இருக்கின்றது. 

தென்காசி கோவிலுக்கு நீங்கள் சென்றால், பொதிகை மலைக் காற்று தவழ்ந்து வரும். 
அது வலுவாக வீசும். உங்களைப் பிடித்து வெளியே தள்ளும். 
அதை எதிர்த்து நீங்கள் உள்ளே சென்றால், அங்கே காற்றின் சுழற்சி எதுவும் இருக்காது. 

அந்த இடத்தைக் கடந்து மேற்கே சென்றால், இப்போது அதே காற்று, உங்களைக் கோவிலை நோக்கித் தள்ளும். 

அதாவது, ஒரே இடத்தில், எந்த விதமான தடுப்பும் இல்லாமல், காற்று கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் வீசுகின்றது. 

அதாவது கடவுளை நாம் நெருங்கிச் செல்கையில் நிறையத் தடைகள் ஏற்படும். அருகில் நெருங்கி விட்டால், அந்தத் தடைகள் விலகி விடும் ..இறைவன் தன்னை நோக்கி உங்களை அழைத்துக் கொள்வார் என்கின்ற தத்துவம்தான் இது. 

சிருங்கேரி சுவாமிகள் இங்கே வந்தபொழுது, 
நான் உடன் இருந்தேன். 
இந்தச் செய்தியை அவரிடம் சொன்னேன். அவர் அந்த இடத்தில் நின்று ஆராய்ந்து பார்த்தார். 

பின்னாளில் ஒருமுறை நான் சிருங்கேரிக்குச் சென்றேன். அப்போது, விதுசேகர பாரதி சுவாமிகள் இருந்தார். 

அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். 

அப்போது அவர் என்னிடம், 
நீங்கள்தானே அந்தக் கோவில் காற்று இரண்டு பக்கமும் மாறி மாறி வீசுவதைப் பற்றிச் சொன்னீர்கள்? என்று கேட்டார். 

அதாவது, பெரிய சுவாமிகள் கோவிலுக்கு வந்தபொழுது, அவரும் உடன் வந்து இருக்கின்றார். 
நான் சுவாமிகளிடம் சொன்னதை அவரும் கேட்டு இருக்கின்றார். அதை நினைவுகூர்ந்து சொன்னார். 

இந்தக் காற்றின் சுழற்சி எப்படி மாறுகின்றது? என்பது யாருக்குமே புரியவில்லை. 

வெளியூர்களில் இருந்து வருகின்ற சிறப்பு விருந்தினர்களை நான் கோவிலுக்கு அழைத்துச் செல்வேன். 
அப்படி ஒருமுறை ஆய்க்குடி அமர் சேவா சங்கம் இராமகிருஷ்ணன் என்னை அழைத்து, ஒரு சிறப்பு விருந்தினர் வருகிறார்..
அவரைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

அவர் இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்து இருந்தார். 
அவர் ஒரு ஆய்வு அறிஞர். அவருக்கு நான் கோவிலைச் சுற்றிக் காண்பித்தேன். காற்றின் சுழற்சி பற்றிச் சொன்னேன். 

அவர் அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். நீண்ட நேரம் ஆய்வு செய்தார். 
இந்த இடத்தில் இயற்கையாகவே ஒரு திரை இருக்கின்றது. 
அந்தத் திரையில்தான் காற்று மோதித் திரும்புகின்றது. அது என்ன என்றால்,  இந்த இடத்தில் ஒரு மின்காந்த அலை இருக்கின்றது. அதை உங்கள் முன்னோர்கள் அதை உணர்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னார். 

அருணகிரி

இந்தத் தென்காசி வரலாறு யாரேனும் எழுதி இருக்கின்றார்களா? 

வேங்கடரமணா

தென்காசி தல புராணம் கோவிலில் இருக்கின்றது. கோவிலில் கல்வெட்டுகள் இருக்கின்றன. 
வேறு யாரும் வரலாறு எழுதவில்லை. இந்த ஊரைப் பற்றி நிறையக் கட்டுரைகள் வெளிவந்து இருக்கின்றன. நானும் எழுதி இருக்கின்றேன். 

தொடர்ச்சி அடுத்த பதிவில். .

அருணகிரி
சங்கரன்கோவில் 
26 டிசம்பர் 2023

No comments:

Post a Comment

Popular

Post Top Ad