தாம்பரம் நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்
சென்னை: நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கு நவம்பர் 2ம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை.. மாறாக தீபாவளி முடிந்து ஊரில் இருந்து திரும்ப வருவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தீபாவளி நவம்பர் 13 தேதிதான் பெருவிமரிசையாக கொண்டாடப்படும்.
ஆனால் தமிழகத்தில் அப்படியே வேறு மாதிரி, அதாவது நவம்பர் 12ம் தேதிதான் தீபாவளி கொண்டாடப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நவம்பர் 12ம் தேதி தான் தீபாவளி. நம்மூர் மக்களுக்கு சிறப்பு ரயில் என்பது நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தான் வேண்டும். ஆனால் சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை
அதேநேரம் தீபாவளி முடிந்து ஊரில் இருந்து திரும்புபவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் நவம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நவ 6,13, 20, 27 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு அன்று மாலை 4.35க்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பாட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 4.10க்கு வரும்
இதேபோல் திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக நாகர்கோவிலுக்கு இரவு 8.45க்கு சென்றடையும். நாகர்கோவில்- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 2ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. " தெற்கு ரயில்வே இவ்வாறு தனது அறிவிப்பில் கூறியுள்ளது
No comments:
Post a Comment