நிலவுக்கான பயணம் வெற்றிகரமாகத் தொடக்கம்
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சோம்நாத், 'எல்விஎம் 3-எம்4 ராக்கெட் சந்திரயான் 3 விண்கலத்தை துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்விஎம் 3-எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, ''சந்திரயான்-3 இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்துகிறது. இந்த முக்கிய சாதனை நம் விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சான்று'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோவின் விண்வெளிப் பரிசோதனைகளிலேயே 'மிகவும் சிக்கலான சோதனைகள்' என சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.
சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார்.
இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார்.
“திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார்.
சந்திரயான் - 1 சாதித்தது என்ன?
சந்திரயான்-1 ஏவப்பட்ட போது, இஸ்ரோ ஆர்பிட்டரை மட்டுமே ஏவியதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆர்பிட்டருடன்
மூன் இம்பாக்ட் ப்ரோப் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் (Moon Impact Probe) ஒன்றும் ஏவப்பட்டது.
சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை' அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது.
நிலவின் மேற்பரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று அறிவித்தது. நிலவின் மேற்பரப்பில் அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
இந்தியாவில் இஸ்ரோ பெரிய அளவில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியதற்கு முன்பே, 1969 இல் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.
அதன் பிறகு 1972 வரை நாசா 12 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் சந்திரயான் 1 மூலம் இஸ்ரோ ஏவிய, 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம்' அந்த சாதனையைப் படைத்தது.
சந்திரயான் -2 திட்டத்தில் என்ன நடந்தது?
சந்திரயான் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இது சுமார் நான்கு டன் எடையை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது.
அதன் பிறகு, அந்த ராக்கெட்டின் உதவியுடன் 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஏவப்பட்டது. இந்த முயற்சியின் போது விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற உலவியும் அனுப்பப்பட்டன.
அதன் பின் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் -2ன் சுற்றுக் கலன் (ஆர்பிட்டர்) வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இதுவரை இந்த ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பின் பெரும்பகுதியை படம் பிடித்துள்ளது. இந்த படங்களில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என்று அப்போது இஸ்ரோ அறிவித்திருந்தது. இதுவரை மூன்று ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது.
அதுமட்டுமின்றி ஆர்பிட்டர் திறமையாக செயல்படுவதால் சந்திரயான்-3 திட்டத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரயான்-2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரே இத்திட்டத்துக்கும் பயன்படுத்தப்படும்.
இதனால் சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. சந்திரயான்-2 விண்கலத்தின் செலவு ரூ.978 கோடியாக இருந்தது. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்திற்கான செலவு ரூ. 615 கோடி மட்டுமே.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் என்ன சிக்கல் ஏற்பட்டது?
இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரான சிவன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், “ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது” என்று கூறினார்.
No comments:
Post a Comment