சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான் -3, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து நேற்று பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தும். அதுதான் முதல் கட்டம்.
விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்றதும், விண்வெளியில் விண்கலத்தின் உந்துசக்தியை இயக்கிவிட கட்டளை பிறப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும். அதுதான் இரண்டாவது கட்டம்.
இதன்படி, வரும் 31-ஆம் தேதிவரை நீள்வட்டப் பாதையில் சந்திரயான்-3 சுற்றிவரும். அதன்பிறகு, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலனை அனுப்பும் மூன்றாவது கட்டப் பணி, அடுத்த மாதம் 5-ஆம் தேதி நிகழ உள்ளது. இதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அதிவேகமாக இயக்கிவிடுவார்கள்.
பூமிக்கும், நிலவுக்கும் இடையே சம ஈர்ப்பு விசைப் புள்ளி (lagrangian points), நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்துவதான் நான்காவது கட்டம். சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கவேண்டும். இதுதான் ஐந்தாவது கட்டம்.
சம ஈர்ப்பு விசை புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படும். இதுதான் ஆறாவது கட்டம். அதன்பின் நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்துவிடும் சந்திரயான் 3 விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும். இதுதான் ஏழாவது கட்டமாகும்.
விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிறுத்தவேண்டும். அப்படிக் கொண்டுவந்து, அதே தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைப்பதுதான் எட்டாவது கட்டம்.
ஒன்பதாவது கட்ட செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.
விண்கலத்தில், உந்துவிசை கருவி (Propulsion), விக்ரம் என்ற லேண்டர் (Lander) என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டும்.
அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். இந்தப் பணிகளை ஒன்பதாவது கட்டம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக,லேண்டருக்குள் இருக்கும் ரோவரை வெளியே எடுத்து நிலவின் தரையில் இறக்க வேண்டும். நிலவின் தரையில் லேண்டர் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ரோவர், அந்தப் பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். இதுதான் பத்தாவது கட்டம். இந்தப் பத்து கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால்தான், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க முடியும்.
அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மாலை 5.47 மணியளவில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் , அதன்பிறகு அதிலிருந்து ரோவர் வாகனம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment