இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் 'சந்திரயான் 3'; உலகம் வியக்கும் தமிழர்!
நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருக்கிறது
இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 என்ற விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடைந்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கருவி திட்டமிட்டபடி தரையிறங்காமல் வேகமாகத் தரையிறங்கியதால் வெடித்துச் சுக்குநூறாக உடைந்தது.
இந்த நிலையில் இஸ்ரோ மீண்டும் நிலவை ஆய்வு செய்ய ரூ. 615 கோடி மதிப்பில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை வடிவமைத்துள்ளது. நிலவுக்குச் செல்லும் 'சந்திரயான் 3' விண்கலத்தைச் சுமந்தபடி, எல்.வி.எம் 3 - எம்4 ராக்கெட் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்கிறது. சந்திரயான் 3 வெற்றி பெற்றால் நிலவுக்கு விண்கலம் அனுப்பியுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய உலக நாடுகளின் வரிசையில் 4வது நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விண்ணில் ஏவப்படும் சாதனையை இந்தியாவே உற்றுநோக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலத்தின் பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் பங்காற்றியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் வீர முத்துவேல், இவரது தந்தை ரயில்வேயில் பணியாற்றி வந்தார். வீர முத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயது முதலே இருந்ததால், அதற்காகத் தன்னை கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்ப்படுத்திக்கொண்டார். டிப்ளமோ முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் சென்னை ஐஐடியிலும் தொழிற்கல்வி பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி படித்தார். சென்னை ஐஐடியில் ஆரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர், 1989 ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த வீர முத்துவேல் 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது கீழ் பல துணை திட்ட இயக்குநர்களும் ஏராளமான விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியதுதான் சந்திரயான் 3 விண்கலம். ஏற்கனவே விண்ணில் பாய்ந்த சந்திரயான் 1 மற்றும் 2 விண்கலத்தின் திட்ட இயக்குநர்களாகத் தமிழர்களே இருந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராகத் தமிழர் வீர முத்துவேல் இருப்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment