சந்திரயான்-3 இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனா். அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.
மத்திய அமைச்சா் வருகை: சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தாா். அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வெள்ளிக்கிழமை சென்று ராக்கெட் ஏவுதலை நேரில் பாா்வையிடுகிறாா். மற்றொரு புறம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியைப் பாா்வையிடுவதற்காக இஸ்ரோ தளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனா். நிலவின் தென்துருவம்: சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன. சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் ஏற்கெனவே நிலவைச் சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதால் இந்த முறை ஆா்பிட்டரை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பவில்லை. அதேவேளையில், தற்போது அனுப்பப்படும் லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் உந்து கலன் மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும்.
அதன்பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் நிலவில் அது இறங்கும். தொடா்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளன. இந்த விண்கலத்தில் மொத்தம் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக் கொள்ளும். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு சந்திரயான்-2 கலம், அதே ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதி செயலிழந்தது. அதிலிருந்து பெற்ற படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சாதனையை சந்திரயான்-3 மூலம் படைக்கக் காத்திருக்கிறது இஸ்ரோ.
No comments:
Post a Comment