SBI வாடிக்கையாளரா நீங்க? புதிய கட்டணம்.. இத படிக்காம ஏடிஎம் பக்கம் போகாதீங்க

 இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்த கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் இருந்து எஸ்பிஐ டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவிலான சராசரி பேலன்ஸை பராமரிப்பது அவசியம் என தெரிய வந்துள்ளது. 

இதன் அடிப்படையில் தான் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ரூ. 25,000 வரை சராசரி பேலன்ஸை வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதேபோல எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

 மாதத்திற்கு ரூ.25,000 - ரூ.50,000 வரை சராசரி பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். எஸ்பிஐ ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம்.

 மாதத்திற்கு ரூ.50,000 - ரூ.1,00,000 வரை குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மூன்று முறை இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

 ரூ.1,00,000க்கு மேல் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம் , மற்ற அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 பரிவர்த்தனை கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது ரூ.20 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்பிஐ ஏடிஎம்களை பயன்படுத்தினால் ரூ.10 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

 நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது ரூ.8 + ஜிஎஸ்டியும், எஸ்பிஐ ஏடிஎம்-ஐ பயன்படுத்தும்போது ரூ.5 + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். போதிய பேலன்ஸ் இல்லாததன் காரணமாக உங்களது பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில் நீங்கள் ரூ.20 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

 அனைத்து கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி என்பது 18 சதவீதம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் குறைந்தபட்ச இருப்பான ரூ.25,000ஐ பராமரிக்கவில்லையெனில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.12 வசூலிக்கப்படும். அதேபோல எஸ்எம்எஸ் அலர்ட்டுகளுக்கான கட்டணமாக ரூ.12 ஒவ்வொரு காலண்டிற்கும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாடிக்கையாளர்கள் வங்கி விதித்துள்ள வரம்புகளைத் தாண்டி ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்