இப்போதாவது விழித்துக்கொள்ளுமா பள்ளிக்கல்வித்துறை?! - வேலையை உதறிய அரசுப் பள்ளி ஆசிரியர் - விகடன் செய்தி
பலரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் ஓர் அரசு வேலையை ஒருவர் உதறித்தள்ளிவிட்டுச் செல்கிறார் என்றால், அது ஆளும் அரசுக்கு ஓர் இழுக்கு. இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும்!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆலந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியரான குப்பண்ணன், கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி, தன் வேலையிருந்து விலகுவதாக துறைக்குக் கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில், ஆன்லைன் மூலம் மதிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தனித்தனி வகுப்புகளாகக் கற்பிக்காமல், வகுப்புகளை ஒன்றிணைத்துப் பயிற்சிப் புத்தகங்கள் மூலம் கற்பிக்கக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பணியிலிருந்து விலகுவதாக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் சமர்ப்பித்தார்.
இந்தத் தகவல் வாட்ஸ்அப் வாயிலாக வெளியில் கசியவே, இது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், கடந்த 8-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆஜராக குப்பண்ணனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், பிரச்னையைச் சரிசெய்வதற்கு பதிலாக, பணியில் அவரை மீண்டும் சேரச் சொல்லி துறையால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதனால், வேறு வழியின்றி அவர் பணியில் சேரவிருக்கிறார்.
இது குறித்து விளக்கம் கேட்க குப்பண்ணனைத் தொடர்புகொண்டோம். “நான் 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். 1-5 வகுப்புகள் இருக்கும் பள்ளியில் மொத்தமாக 70 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைத்து, ஒற்றை ஆளாக எப்படிப் பாடம் நடத்த முடியும்... ஆனால், அரசு அப்படி நடத்தவே நிர்பந்திக்கிறது. மேலும், ’எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். பள்ளி இருக்கும் கொல்லிமலைப் பகுதியில் டவர் கிடைக்காது. இதனால், மாணவர்களை அழைத்து மூன்று கிலோமீட்டர் தள்ளி வந்து, பிறகு தேர்வை நடத்த வேண்டும். ஒரு வகுப்பினரைப் பள்ளியிலிருந்து கூட்டி வந்துவிட்டால், மற்ற மாணவர்களை யார் கட்டுப்படுத்துவது?
இதனால் மாணவர்களுக்கிடையில் பிரச்னை அதிகரித்து, ஆசிரியர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தம் உண்டாகிறது. ஆனால், இந்தச் சிக்கல் எதையுமே கருத்தில்கொள்ளாமல் அரசு திட்டத்தைச் செயல்படுத்த அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்குச் சரியான வசதிகளைச் செய்து தருவதில்லை. இப்போதும் எதற்காகப் பணியிலிருந்து விலகினேனோ, அது இன்றும் சரிசெய்யப்படவில்லை. ஆனால், மீண்டும் பணியில் சேர வேண்டும் என துறை கேட்டுகொண்டதால் பணியில் சேர்கிறேன்” என்றார்.
இது குறித்து ஆசிரியர் பொன்மாரி என்பவர் பேசுகையில், ``பள்ளிக் கல்வியில் ’எழுத்து, வசிப்பு, பயிற்சி’ என அனைத்தும் கூட்டாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பயிற்சிக்கு (Activity) மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தத் தேர்வையும்கூட ஆன்லைனில் வைக்கச் சொல்கின்றனர். அரசு சார்பாகப் பல கோடி ரூபாயில் புத்தகங்கள் அச்சிடக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் ஆன்லைனில் என்றால், இந்தப் புத்தகங்களுக்கான அவசியம் என்ன... ’மாணவர்கள் மத்தியில், வகுப்பறைக்குள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது’ என யுனெஸ்கோ சொல்கிறது. ஆனால், தமிழக அரசு 1-ம் வகுப்பு குழந்தையையும் போனில் தேர்வு எழுதச் சொல்கிறது.
`எண்ணும் எழுத்தும்’ திட்டம் மாணவர்களுக்கு எந்த வேலையையும் தருவதில்லை. அதனால் ஆசிரியர்களுக்குத்தான் வேலை. இந்தத் திட்டத்தை மதிப்பீடு செய்ய ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களை நியமித்திருக்கின்றனர். ஓர் ஆசிரியரை மதிப்பீடு செய்ய பயிற்சி பெறுபவரை அனுப்புவது எந்த வகையில் நியாயம்?
தற்போது, பணியிலிருந்து வெளியேறிய ஆசிரியர் சொன்ன பிரச்னைக்குத் தீர்வைத் தருவதற்கு பதிலாக, விமர்சனத்தைத் தவிர்க்க அவரைக் கட்டாயப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறது துறை. தங்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் வராமலிருக்க, தீவிரமாகப் பள்ளிக்கல்வித்துறை பணியாற்றுகிறது. ஆனால், பிரச்னையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் இந்த மோசமான செயலபாட்டால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறையும். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்வார்கள்.
குப்பண்ணன்போல் வெளியில் தெரியாமல் வேலையை உதறித்தள்ளிவிட்டுச் சென்றவர்கள் எத்தனையோ பேர். கடந்த ஆண்டில் வி.ஆர்.எஸ் வாங்குவது ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. இது அரசின் தோல்வி என்பதையும் ஒப்புக்கொண்டு. இதைச் சீரமைப்பதற்கான வழிகளை அரசு கையிலெடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரியிடம் பேசினோம். ”பொதுச் சமூகத்தில் மாணவர்களுக்குப் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அவர்களைச் சீர்திருத்தும் நோக்கில்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆனால், மாணவனைச் சீர்திருத்தாமல் ஆசிரியர்கள், அரசு கொண்டுவந்த திட்டத்துக்கான ஆன்லைன் பதிவேற்றத்தை மட்டும் பார்த்தால் மாணவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது?
திமுக அரசு, பொறுப்புக்கு வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறையில் பல புதிய திட்டங்களைக் கொண்டுவந்தது. ஆனால், அவற்றை முழுவதுமாகச் செயல்படுத்த ஆட்கள் தேவை. ஆனால், ஆசிரியர்களை இறுதிவரை நியமிக்கவில்லை. ஓர் ஆசிரியர் எத்தனை பணிகளைச் செய்ய முடியும்... `இல்லம் தேடிக் கல்வி’ ஒரு தோல்வி திட்டம். அதன் வரிசையில், `எண்ணும் எழுத்தும்’ திட்டமும் சேர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், ’எண்ணும் எழுத்தும் திட்டத்தை 9-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என அறிவிப்பு வருகிறது. அந்தத் திட்டத்தின் நோக்கம் கணக்கு போடுவது மற்றும் எழுத்துத்திறன் மட்டும்தான். அந்த இரண்டை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டுமென்றால், நம் மாணவர்களின் நிலை குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.
’ஏனோ தானோ’ என நிர்வகிக்கும் ஒரு துறை அல்ல பள்ளிக்கல்வித்துறை. நாள்தோறும் மாணவர்களுக்குப் பல பிரச்னைகள் வரும். அவற்றைச் சரிசெய்ய தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு வாய்ப்பு தராமல், அரசின் திட்டங்களை மட்டும் பார்ப்பதால் என்ன பயன்... உண்மையில் கள நிலவரம் என்ன என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
ஆனால், இதையெல்லாம் அரசிடம் கொண்டு செல்லவேண்டிய ஆசிரியர்கள் அச்சத்தில் இருப்பதால் மேலிடத்துக்கும் இந்தச் சிக்கல்கள் தெரிவதில்லை. எனவே, ஆசிரியர்கள் இதை அவர்களுக்கான பிரச்னையாகப் பார்க்காமல், மாணவர்களின் நலனும் பாதிக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் சந்திக்கும் சிக்கலை வெளியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசின் பார்வைக்குச் சென்று தீர்வு கண்டடையப்படும். இதை வெளியில் சொல்லாமல் இருக்கும்பட்சத்தில், ’திட்டம் ஹிட்’ என அரசு பகல் கனவிலும், மாணவர்களின் எதிர்காலம் புதைகுழியிலும்தான் இருக்கும். பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஓர் அரசு வேலையை ஒருவர் உதறித்தள்ளிவிட்டுச் செல்கிறார் என்றால், அது ஆளும் அரசுக்கு ஓர் இழுக்கு. இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும்” என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, ``அந்த ஆசிரியர் ராஜினாமா செய்ததாகச் சொல்வது ஒரு ‘டிராமா.’ ராஜினாமா செய்வதற்கான எந்த வழிமுறையையும் அவர் பின்பற்றவில்லை. அவர் சமூக வலைதளத்தில் தன் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டதே தவறு. இதற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதை விசாரித்தால் அவர் வேலை போகும், பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்வார்... இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்போகிறேன். அப்போது அவர் ஆடியது நாடகம் என்பது தெரியவரும். யாரும் தன் முதுகைத் தட்டிக்கொடுத்து, தான் நன்றாக வேலை பார்ப்பதாகச் சொல்ல முடியாது. இதனால், மாணவர்களைச் சோதனை செய்ய வெளியிலிருந்து ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களை அனுப்புகிறோம்.
அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநர்
ஆன்லைனில் அனைத்து மதிப்பீடுகளையும் ஆப்பில் போடச் சொல்வதிலும் சிக்கல் இருக்கிறது. அதற்குத் தீர்வாக, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தில் வெறும் 3 ஆப்கள் மட்டும் ஆசிரியர் பயன்படுத்தினால் போதும், மற்ற ஆப்களை துறை பார்த்துக்கொள்ளும் என்னும் அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்” என்றார்.
`எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் எதிர்ப்பு குறித்துக் கேட்டபோது, ”ஆசிரியர் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள். அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்றார். `அப்படியானால், எண்ணும் எழுத்தும் திட்டத்தை எதிர்த்து ரோட்டில் இறங்கி ஆசிரியர்கள் போராடுவது பொய்யா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ”இதற்குத் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்தான் பதில் சொல்ல வேண்டும்” என இணைப்பைத் துண்டித்தார்!
0 Comments