தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம். பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) என மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப் படிப்புகள் உள்ளன. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் 66,696 பேர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.
இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் ஆக.14-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் வரும் 18-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். ஆக.21-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
22-ம் தேதி இடஒதுக்கீடு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment