CBSE பள்ளிகளில் தமிழ் மீடியம்; வாரியம் உத்தரவு.
'நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுதும், 28,886 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்; 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
பயிற்று மொழி
இந்த பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களிடையே பன்மொழி திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது
இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து, புதிய தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் கல்வித் துறையில் தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வி துறையிலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்பிப்பதிலும், இதை நடைமுறைப்படுத்துவதிலும் சில சவால்கள் உள்ளன.
அடித்தளம்
இந்த மொழிகளில் பாடம் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடப்புத்தகங்களை தயாரிப்பது, இரண்டு, 'ஷிப்டு' களாக இயங்கும் அரசு பள்ளிகளில், இதற்கான நேரத்தை ஒதுக்குவது ஆகியவை சவாலான விஷயங்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இதற்காக தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 2024 - 25ம் கல்வியாண்டு முதல், இந்த பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.
இந்த பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் பணியை உயர் கல்வித் துறை துவங்கியுள்ளது. நாடு முழுதும் பிராந்திய மொழிகளில் முக்கியமான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தொழிற்கல்வி, சட்டம், மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு, ஏற்கனவே பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
எனவே, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான முக்கியமான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வி துறையிலும் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கும் முயற்சி துவங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment