எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு: ஜூலை 20-ல் தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 20-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள், இணையதளத்தில் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். வரும் 25-ம் தேதி இரவு 8 மணி வரை கட்டணம் செலுத்தலாம். வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.
வரும் 27, 28-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 29-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். 30-ம் தேதி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஜூலை 31-ம் தேதி முதல் ஆக. 4-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் ஆக. 5, 6-ம் தேதிகளில் நடைபெறும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆக. 9-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆக. 31-ம் தேதியும், மூன்று சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப். 21-ம் தேதியும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூலை 12-ம் தேதி நிறைவடைந்தது.
மொத்தம் 40,199 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment