Header Ads Widget

நவோதயா வித்யாலயாவில் 6-ம் வகுப்பு சேர தேர்வு: 80 இடங்களுக்கு 1,562 பேர் போட்டி

 நவோதயா வித்யாலயாவில் 6-ம் வகுப்பு சேர தேர்வு: 80 இடங்களுக்கு 1,562 பேர் போட்டி

 

1347413

புதுச்சேரியில் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் ஆறாம் வகுப்பு சேர 8 மையங்களில் இன்று (சனிக்கிழமை) தேர்வு நடந்தது. மொத்தமுள்ள 80 இடங்களுக்கு 1,562 பேர் போட்டியிட்டுள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 6ம் வகுப்பு சேருவதற்கான தெரிவு நிலை தேர்வு சனிக்கிழமை காலை 11.30 மணி முதல், 1:30 மணி வரை நடந்தது. புதுவை பெரிய காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் 6-ம் வகுப்பில் 80 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர இந்த ஆண்டு கடும் போட்டி ஏற்பட்டது. மொத்தமுள்ள 80 சீட்டிற்கு ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரு இடத்துக்கு 24 பேர் வீதம் போட்டி களத்தில் இருந்தனர்.


இவர்களுக்கான தேர்வு இன்று சனிக்கிழமை புதுச்சேரி திருவிக., அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.


தேர்வுக்கு காலை 10 மணி முதலே பெற்றோர்களுடன் மாணவர்கள் வந்தனர். ஹால்டிக்கெட்டை சரிபார்த்து மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 11.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.30-க்கு முடிந்தது. நவோதயா பள்ளிகளில் மாநில அரசுகளை போன்று 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உணவு, விடுதி வசதி, சீருடை, புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.


புதுவையில் உள்ள நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருக்கிறது. இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் கூட இல்லை. எந்தப் பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடையாது. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதால் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்து பலரும் இத்தேர்வில் பங்கேற்றனர்.


புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் தேர்வு மையங்கள் அனைத்தையும் பார்வையிட்டார். அவர் கூறுகையில், "வரும் கல்வியாண்டில் புதுச்சேரியில் ஆறாம் வகுப்பில் சேர 80 இடங்களுக்கு 1,954 பேர் விண்ணப்பித்தனர். அதில் 1,562 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமையின் கீழ் கல்வித்துறையினர், புதுச்சேரி ஜவகர் நவோதயா ஆசிரியர்கள், பணியாளர்கள் இணைந்து செய்திருந்தோம் என்று குறிப்பிட்டார்


Post a Comment

0 Comments