*🩺👌🏼🩺நுரையீரலை பாதுகாப்போம் - 1...*



நுரையீரல், நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராணவாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாயுவை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணி. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.


மூக்கின் உள்ளே இருக்கும் ரோமங்கள் தூசிகளை வடிகட்டும். அதையும் தாண்டி தூசி மூச்சுக்குழலுக்குள் சென்றால் இருமல், தும்மல் ஏற்பட்டு தூசி வெளியேற்றப்படுகிறது.


மூளையில் உள்ள முகுளப்பகுதி தான் சுவாசத்தை நிமிடத்துக்கு 18 முதல் 20 வரை என சீராக வைக்கிறது. நாம், ஒரு நாளைக்கு சராசரியாக மூச்சுக்காற்றை 22 ஆயிரம் முறை உள்ளே இழுத்து விடுகிறோம். அவ்வாறு உள்ளே இழுத்து வெளியேவிடும் காற்றின் அளவு, சராசரியாக 9 ஆயிரம் கன அடி ஆகும்.


நுரையீரலில் 6 லிட்டர் காற்றை நிரப்பலாம். மூச்சுக் காற்றை இழுத்து விடும்போது 5 லிட்டர் காற்று வெளியேறும். ஒரு லிட்டர் காற்று நுரையீரலுக்கு உள்ளேயே இருக்கும்.


*நுரையீரல் எதிரிகள்*


மனிதனின் மிக முக்கியமான உள்உறுப்பான நுரையீரலுக்கு, புகையிலை, முக்கிய எதிரி. புகை பிடிக்கும் போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் நுரையீரலுக்குள் செல்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி அடுப்பின் புகை, காற்றின் மாசு ஆகியவை ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழாய் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. 


வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் உண்ணி, அறையில் வாசம் வீச தெளிக்கும் வாசனை திரவியம், மெழுகுவர்த்தி புகை போன்றவையும் தீங்கு விளைவிக்கிறது.


ஒரு வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலும், சுவாசிப்பதில் பிரச்சினை இருத்தல்,  மூச்சுவிட சிரமமாக இருத்தல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.


*நுரையிரலுக்கேற்ற உணவுகள்*


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. காய்கறிகள், வைட்டமின்-சி நிறைந்த ஸ்ட்ராபெரி, கிவி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை உண்பது சுவாச மண்டலத்தை பாதுகாக்கும். அதேபோல் மீன் உணவு, மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலம், நுரையீரலின் தசைகள் வீக்கமடையும் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.


*உடற்பயிற்சி*


நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது. அதேபோல் மூச்சுக்காற்றை உள்ளே இழுத்துவிடும் சுவாசப்பயிற்சி, நச்சை வெளியேற்றும். சுவாச பாதையை சுத்தப்படுத்தும். உடலுக்கு அதிகமான பிராணவாயு கிடைக்க வழிவகை செய்யும். நுரையீரலின் செயல்திறனை நன்கு வைத்திருக்க உதவும். நுரையீரலை பலப்படுத்தும். குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும்.


பஞ்சாலை, கட்டுமானம், இரசாயனம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மாசு, தூசு, புகை நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் பணி நேரத்தில் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொள்ள வேண்டும். நுரையீரல் பாதிக்காத வகையில் நாம் உடல் ஆரோக்கியத்தை பேணுவது நல்லது.


*நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!*


சுத்தம் சுகம் தரும்  தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக் கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை, உடல்  உள்ளேயும் கூடதான். 


*உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம் செய்வது?*


உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை உணவின் மூலம்  சுலபமாக சுத்தம் செய்யலாம்.  


*குருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)*


முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள்,  சிலுவை போன்ற அமைப்பில்,  ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது  நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற  காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.


*கார்டீனாய்ட்ஸ்* (Cartenoids)


இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.