இந்தியா
ராணுவம் என்பது எதிரிகளுடன் போரிடத்தான்: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌல்
புது தில்லி: ராணுவம் என்பது, நாட்டின் எதிரிகளுடன் எல்லையில் போரிடத்தானே தவிர, நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியிருந்த நிலையில், நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் தனிப்பட்ட தீர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிக்க.. யார், யாருக்கு ரூ.6 ஆயிரம்: தங்கம் தென்னரசு விளக்கம்
அவர் வெளியிட்ட தீர்ப்பில், சட்டப்பிரிவு 370- உருவாக்கப்பட்டதன் நோக்கம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை மெல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டு வர வேண்டும் என்பதே.
காயங்களை குணப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாக, அங்கு நடந்த அத்துமீறல்களை ஒப்புக்கொண்டு, உண்மையைக் கூறுவதுதான் நல்லிணக்கத்துக்கு வழிகோலும்.
ராணுவம் என்பது ஒரு நாட்டின் எதிரிகளுடன் எல்லையில் போரிடத்தானே தவிர, நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அல்ல. எனவே, அப்போதைய அரசு செய்த மனித உரிமை அத்துமீறல்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நடுநிலையான குழுவை அமைக்க பரிந்துரை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.
வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வெளியிட்டார். அதில், “குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறுஆய்வுக்கு உட்படுத்த முடியாது.
போர் சூழலை கட்டுப்படுத்த இடைக்கால தீர்வாகத்தான் சட்டப்பிரிவு 370 உள்ளது. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. இதன்மூலம், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம் என்று தீர்ப்பளித்திருந்தார்
No comments:
Post a Comment