பொறியியல் கட்-ஆப்பில் முதலிடம்: மருத்துவம் படிக்க ஆசை..! பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி விருப்பம்


    Etv Bharat

    அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த தருமபுரி மாணவி மகாலட்சுமி, மருத்துவ கலந்தாய்வில் அரசு கல்லூரி கிடைத்தால் மருத்துவம் பயிலப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

    7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி - மருத்துவம் படிக்க விருப்பம்

    தருமபுரி:தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியானது. இதில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில், தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 579 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்தோடு, பொறியியல் கட் ஆப்பில் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில், இவ்வாறு சாதனை படைத்த மாணவி மகாலட்சுமிக்கு அவரது தந்தை சீனிவாசன், தாய் சுஜாதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பொறியியல் கலந்தாய்வில் முதலிடம் பிடித்த மாணவி மகாலட்சுமி பேசும்போது, 'ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததாகவும் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நன்றாக படித்ததால், அரசு மாடல் பள்ளியில் படிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாடல் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    நடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில், தமிழக அளவில் தான் முதலிடம் பிடித்தாக மகிழ்ச்சியுடன் கூறிய அவர், தனது இந்த வெற்றிக்கு, தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் தான் காரணம் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் தனக்கு அவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால், தன்னால் அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியாது என்றும் ஆகவே, அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

    இந்த நிலையில், மருத்துவ கலந்தாய்வுக்காக எதிர்பார்த்து தான் காத்திருப்பதாகவும், அந்த மருத்துவ கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதன் பிறகே பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க இருப்பதாகவும் மாணவி மகாலட்சுமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய மாணவியின் தந்தை சீனிவாசன், 'தனியார் கம்பெனியில் தான் பணியாற்றி வருவதாகவும், தனது மனைவி சுஜாதா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு மகாலட்சுமி, ரேணு என்று இரண்டு மகள்கள் உள்ளதாகவும் கூறினார்.

    இந்த நிலையில், தனது மகள் மகாலட்சுமியை அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்து வந்த நிலையில், அவர் நன்றாக படித்ததாக தெரிவித்தார். இதனால், அரசு மாடல் பள்ளியில் அவரை சேர்க்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அதில் சேர்த்து படிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தருமபுரியில் உள்ள மாடல் பள்ளியில் நன்றாக படித்ததால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாடல் பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதன் பின்னர், அங்கும் நன்கு படித்த தனது மகள் மகாலட்சுமி அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதே நேரத்தில் தமிழக அளவில் அரசு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்தும் தனது மகள் மகாலட்சுமி சாதனைப் படைத்துள்ளதாகவும், இது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், நடுத்தர குடும்பமாக இருந்தாலும் படிப்புக்கு எங்களால் முடிந்த அளவு படிக்க வைத்ததாகவும், தற்போது பொறியியல் கலந்தாய்வில் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்த தனது மகள் மகாலட்சுமிக்கு மருத்துவ கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் மருத்துவம் படிக்க ஆசைப்படுவதாக கூறினார். அதே நேரத்தில், ஒருவேளை அதில் இடம் கிடைக்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நல்ல பொறியியல் பாடத்தை தேர்வு செய்து படிக்க வைக்க உள்ளதாகவும்' அவர் கூறியுள்ளார்.